தனுஷ்கோடியில் திடீர் கடல் சீற்றம்! 10 கி.மீ. தொலைவுக்கு சுற்றி வளைத்த கடல் நீர்!
ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குப் பிறகு எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரை கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை பகுதியில் கடல்நீர் சூழ்ந்துள்ளது.
ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியில் திடீரென ஏற்பட்ட கடுமையான கடல் சீற்றம் காரணமாக எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரை சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு கடல் நீரால் சூழப்பட்டது.
1964ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் புயலுக்குப் பிறகு தனுஷ்கோடியில் சிதிலமடைந்த ஒரு தேவாலயமும், சில கட்டிடங்களும் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனால், ராமேஸ்வரம் வரும் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் தனுஷ்கோடிக்கு வந்து செல்கிறார்கள். இதனால் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் தனுஷ்கோடி உள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணிக்குப் பிறகு எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரை கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை பகுதியில் கடல்நீர் சூழ்ந்துள்ளது.
கம்பிப்பாடு பகுதியில் இருந்து அரிச்சல்முனை இடையேயான தென்கடல் பகுதியிலும் கடல் சீற்றம் காரணமாக கடல்நீர் தடுப்புச் சுவரில் மோதி சாலை வரை வந்தது. இதனை அப்பகுதி மக்களும் சுற்றுலா பயணிகளும் போட்டோ, வீடியோ எடுத்து மகிழ்ந்தார்கள்.
இதனிடையே, கடற்கரையில் மீனவர்கள் நிறுத்தி வைத்திருந்த படகுகள் கடலில் சீற்றத்தால் சேதம் அடையாமல் பாதுகாக்க மீனவர்கள் கடுமையாகப் போராட வேண்டிய நிலை ஏற்ப்பட்டது. கடலில் அலைகள் சக்திவாய்ந்த அலைகள் அதிகமாக எழுவதால் சுற்றுலா பயணிகள் படகுகளில் செல்ல இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.