இந்தியா முழுவதும் இன்றைய நிலவரப்படி 1,965 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 50 பேர் பலியாகி இருக்கின்றனர் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க நாடு முழுவதும் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனிடையே தமிழகத்திலும் கொரோனா  பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி இருந்த நிலையில் தற்போது மேலும் இருவருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது உறுதியாகி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். கொரோனா தொற்று உறுதியாகியுள்ள 2 பேரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 236 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. இதுவரையில் தமிழகத்தில் ஒருவர் கொரோனவால் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.