வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25ம் தேதி புயலாக மாறி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடைக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. 

 சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்: வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காலை உருவானது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகும். இது, மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து வருவதால் நவம்பர் 23ம் தேதி  தமிழக கடற்கரை நோக்கி வரக்கூடும். இதன்காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நவம்பர் 23ம் தேதி முதல் நவம்பர் 25-ம் தேதி வரை பலத்த மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வரும் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.

அதேபோல், நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவம்பர் 24ம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழையும், கடலூா், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை முதல் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.