கோயில் காளைக்காக கண்ணீர் மல்கிய கிராம மக்கள்... கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் இறுதிச்சடங்கு..!
உயிர்களை உணர்வோடு பார்க்க வேண்டிய மனிதர்கள் உணர்விழுந்து இயந்திரமாய் சுற்றிதிரிகிறோம். இந்த சூழலில் உயிரிழந்த கோயில் காளைக்கு கரகாட்டம், ஒயிலாட்டம், மேள, தாளங்களுடன் கண்ணீர் மல்க இறுதிச் சடங்கு செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உடையநாதபுரத்தில், 23 வயதுடைய அழகர்மலையான் என்ற கோயில் காளையை, அப்பகுதி மக்கள் தங்களது குலதெய்வமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, வளர்த்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில் வயதுமுதிர்வு காரணமாக கோயில் காளை கடந்த திங்கள்கிழமை திடீரென உயிரிழந்தது.
இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. இந்நிலையில், கிராம மக்கள் ஒன்று கூடி காளையை குளிப்பாட்டி, மாலை மற்றும் கைத்தறி ஆடைகளை அணிவித்து ஏராளமானோர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதன் பின்னர் கிராம மக்கள் ஒன்று கூடி, காணிக்கையாக பெற்ற பணத்தை வைத்து கரகாட்டம், ஒயிலாட்டம், வான வேடிக்கை மேள, தாளங்களுடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அங்குள்ள கண்மாய் கரையோரம் காளையை பொதுமக்கள் அடக்கம் செய்தனர். அப்போது அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷமிட்டு காளையை வணங்கினர்.