ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, வலையில் சிக்கிய மிகவும் அரிய வகை டால்பினை மீனவர்கள் கடலில் விட்டனர். இவர்களது இந்த செயலுக்கு வனத்துறை மற்றும் நெட்டிசன்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

மீனவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், பாம்பன், உச்சி புலி, தனுஷ்கோடி ஆகிய இடங்களில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். இந்த மாவட்டத்தில் இருக்கும் கீழக்கரை பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்தனர். அப்போது வலையில் உயிருடன் அரிய வகை இரண்டு டால்பின்கள் சிக்கின. கரைக்கு இழுத்து வந்த பின்னர் அந்த இரண்டு டால்பின்களையும் மீனவர்கள் கடலில் கொண்டு சேர்த்தனர். இந்த வகை அரிய டால்பின்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

கரைக்கு வந்த பின்னர் வலையில் சிக்கியது மீன் அல்ல என்பதை அறிந்தனர். இது ஒரு அரிய வகை டால்பின் என்று அறிந்தவுடன் மீனவர்கள் இணைந்து இந்த டால்பின்களை கடலில் சேர்த்தனர். மீன்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகுவும் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ''ராமநாதபுரம் மாவட்டம், கீழ்க்கரை பகுதியில் மீன்பிடி வலையில் சிக்கிய இரண்டு டால்பின்கள் தமிழ்நாடு வனக் குழுவினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் வெற்றிகரமாக மீட்டு இன்று விடுவித்தனர். இது சமூக ஈடுபாட்டின் மிகப்பெரிய சக்தி. இந்த உண்மையான ஹீரோக்களை கவுரவிப்போம். டிஎப்ஓ ராமநாதபுரம், @TNForest என்று பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

கீழக்கரை பகுதியை சேர்ந்த மீனவர்களை ராமநாதபுரம் வனச்சரகர் நேரடியாக சந்தித்து பாராட்டினார். மேலும், அழிந்து வரும் கடல்வாழ் உயிரினங்களை மீட்கும் மீனவர்களுக்கு தமிழக அரசின் வனத்துறை சார்பில் சன்மானம் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.