பெண் போக்குவரத்து ஊழியர் தற்கொலை... வெளியானது அதிர்ச்சி கடிதம்..!
ராமநாதபுரத்தில் போக்குவரத்து கழக பெண் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் போக்குவரத்து கழக பெண் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் காட்டூரணியைச் சேர்ந்தவர் நம்புராஜன். இவரது மனைவி ஷோபனா (41). இவர் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில் புறநகர் பிரிவில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.வழக்கம் போல் நேற்று வேலைக்குச் சென்ற ஷோபனா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த நம்புராஜன் மற்றும் உறவினர்கள் ஷோபனாவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, காட்டூரணியில் புதிதாக தோண்டப்பட்ட குடிநீர் கிணற்றில் பெண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை கைப்பற்றினர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தது மாயமான ஷோபனா என்பது தெரியவந்தது.
இந்நிலையில் ஷோபனா வீட்டில் அவர் எழுதி வைத்திருந்த பரபரப்பு கடிதம் சிக்கியது. அதில், தன்னுடன் பணியாற்றும் 3 பெண் ஊழியர்களின் டார்ச்சர் காரணமாகவே தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு காரணமான அவர்கள் மீது உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பிற பணியாளர்கள் முன்னிலையிலேயே அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி வந்ததாகவும் கடிதத்தில் ஷோபனா குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ள ஷோபனா, தனது ஏ.டி.எம் அட்டையின் ரகசிய எண், நகைகள் இருக்கும் இடம் ஆகியவற்றை குறிப்பிட்டு மகளை பார்த்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.