மதுரை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் தேர்தல் தேதியை வேறு நாளுக்கு மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக  ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலும், 18 தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், தேர்தல் நடைபெறும் நாளில் மதுரையில் புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவும் நடைபெற உள்ளதால், மதுரையில் தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திவருகிறார்கள். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. 
இந்நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, “சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை ழுந்துள்ளது. மதுரை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் தேர்தல் தேதியை வேறு நாளுக்கு மாற்ற வேண்டும். தேர்தல் முறைகேடு இல்லாமல் நடைபெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தேர்தல் நியாயமாக நடைபெறும் என்றும் சொல்ல முடியாது. எந்த முறைகேடும் இல்லாமல் தேர்தலை நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.” என்று தெரிவித்தார்.