10 கோடி ரூபாய் சொத்துக்காக 12 ஆண்டுக்கு முன்பு இறந்த பங்கு தந்தைக்கு மீண்டும் உயிர் கொடுத்த ஆசாமி
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவாலயத்திற்குச் சொந்தமான நிலத்தை பொய்யான ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயலும் நபர் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை.
சாயல்குடி புனித ஆரோக்கிய அன்னை மாதா கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான 6.22 ஏக்கர் நிலத்தை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போன பங்குத்தந்தையின் பெயரில் போலியான உயில் தயார் செய்து, வருவாய்த்துறையினரின் உதவியுடன் பட்டா மாறுதல் பெற்று, அந்த நிலத்தை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற மோசடி சம்பவம் சாயல்குடி பகுதி கிறிஸ்தவ மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் கன்னியாகுமரி சாலையில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை மாதா கோயிலுக்கு சொந்தமான பொது சொத்தை தனி நபர்கள் சிலர் மோசடியாக பட்டா மாற்றி விற்பனை செய்ய முயன்றதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 1979ம் ஆண்டு சாயல்குடி பங்கை சேர்ந்த ஆரோக்கிய அன்னை ஆலயத்திற்கு, அப்போதைய பங்குத்தந்தையாக இருந்த செல்வராஜ் அடிகளார் பெயரில் சர்வே எண் 470/2 ல் 6.22 ஏக்கர் நிலத்தை சாயல்குடி ஜமீன்தார் அண்ணாச்சாமி பாண்டியன் அவர்களிடம் விலைக்கு வாங்கி பத்திரம் பதிவு செய்து பட்டா மாறுதலும் செய்துள்ளனர்.
தற்போது அந்த நிலத்தின் மதிப்பு சுமார் 10 கோடி என கூறப்படுகிறது. அந்த நிலத்தை தற்போதுவரை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தப்பகுதியைச் சேர்ந்த 'மனோசந்தர்' என்பவர் மோசடியாக கிறிஸ்தவ மக்களை ஏமாற்றும் விதத்தில் போலி இறப்புச் சான்றிதழ் மற்றும் போலி உயில் ஆவணம் தயார் செய்து, கடந்த மார்ச் 3ம் தேதி சென்னையில் பத்திரப்பதிவு மூலம் அவரது பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்காக, கடந்த 2012ம் ஆண்டு இறந்து போன அப்போதைய பங்கு தந்தை செல்வராஜ் பெயரில் (உயில் மாற்றத்துக்குப்பின் இந்தாண்டு இறந்ததாக) போலியான இறப்பு சான்றிதழ் மற்றும் போலியான உயில் ஆவணங்களை தயாரித்து மோசடியாக ஜோடனை செய்து கிறிஸ்துவ மக்களை ஏமாற்றி நிலத்தை அவரது பெயரைக்கு பத்திரம் பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா: தேதி அறிவித்த தவெக தலைவர் விஜய்!
மேலும் இந்த மோசடி பத்திரப்பதிவிற்குப் பிறகு அந்த இடத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக சாயல்குடியில் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவருக்கு பெரும் தொகையை கையூட்டாக கொடுத்து, கடலாடி மண்டல துணை வட்டாட்சியரின் துணையோடு பட்டா மாறுதலும் செய்யப்பட்டு அந்த நிலம் தற்போது விற்பனைக்கு வந்த நிலையில், விஷயம் அறிந்த சாயல்குடி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் இந்த மோசடி குறித்து, கடலாடி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பரமக்குடி சார் ஆட்சியர் அவர்களிடமும் தகுந்த ஆதாரங்களுடன் புகார் மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக சாயல்குடி மாதா கோயில் முன்னாள் நிர்வாகி அந்தோணிச்சாமி கூறுகையில், சாயல்குடி சுற்றுவட்டார 15 ஆயிரம் கிறிஸ்தவ மக்களுக்கு பாத்தியப்பட்ட மாதா கோயிலுக்கு சொந்தமான நிலத்தை பொய்யாக, போலியான ஆவணங்கள் தயார் செய்து விற்க முயன்ற நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவரை தண்டிக்க வேண்டும்.
அது மட்டுமின்றி போலியான ஆவணங்கள் மூலம் செய்யப்பட்ட பத்திரப்பதிவு மற்றும் பட்டா மாறுதலை உடனே ரத்து செய்து அந்த நிலத்தை மீண்டும் மாதா கோயிலுக்கு சொந்தமாக்க வேண்டும். இது குறித்து நடவடிக்கை எடுக்க அரசு தாமதிக்குமானால் ஒட்டுமொத்த கிறிஸ்தவ மக்களையும் ஒன்று திரட்டி சாயல்குடி - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட போவதாக எச்சரிக்கை தெரிவித்தார்.