ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் சாகித் அப்ரிடி. இவர் அந்த பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முனீஸ்வரன், நம்புநாதன் ஆகிய இருவரும் உணவு அருந்த சென்றுள்ளனர். இரண்டு பேரும் மது போதையில் சாப்பிட்டு முடித்ததும் பணம் செலுத்தாமல் வெளியேறி இருக்கின்றனர். பணம் கேட்ட கடையின் உரிமையாளரிடமும் தகராறு செய்து தகாத வார்த்தையில் பேசிவிட்டு சென்றுள்ளனர்.

பின்னர் மறுநாளான ஞாயிற்று கிழமை மதியம் தங்கள் நண்பர்கள் சிலருடன் பயங்கர ஆயுதங்களுடன் இருவரும் மீண்டும் உணவகத்திற்கு வந்தனர். அங்கு உரிமையாளர் மற்றும் ஊழியர்களை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியிருக்கிறது. உணவகத்தில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தி சென்றனர். படுகாயங்களுடன் கிடந்த சாகித் அப்ரிடியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் சாகித் புகார் அளித்துள்ளார்.

வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். தாக்குதல் நிகழ்வுகள் அனைத்தும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. அதனடிப்படையில் தலைமறைவாக இருக்கும் கும்பலை தனிப்படை அமைத்து காவலர்கள் தேடி வருகின்றனர்.