புயலால் அழிந்த தொழில் நகரம்: தனுஷ்கோடியில் கவனம் செலுத்துமா தெல்லியல்துறை
முக்கிய தொழில் நகரமாகவும், குட்டி சிங்கப்பூராகவும் திகழ்ந்து 1964ம் ஆண்டு ஏற்பட்ட புயலால் அழிந்து போன தனுஷ்கோடி மீது தொல்லியல் துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது தனுஷ்கோடி. தனுஷ்கோடியில் இருந்து 18 கி.மீ. தொலைவில் தான் இலங்கை உள்ளது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ரயில்நிலையம், இலங்கைக்கு வணிகத்திற்காக செல்லும் கப்பல்களுடன் பெரிய துறைமுகம் இந்து கோவில், தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களும் இருந்தன.
1961ல் தமிழக அரசால் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட சுவடியில் தனுஷ்கோடியில் சுமார் 3 ஆயிரத்து 197 பேர் வாழ்ந்ததாகவும், இங்கிருந்து பருத்தி துணிகள், பித்தளை, அலுமினியம், கருவாடு, முட்டை, காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் பதிவுகள் உள்ளன.
கடந்த 1964 டிசம்பர் 22ல் தனுஷ்கோடியில் புகுந்து ருத்ததாண்டவம் ஆடியது. இதில் ரயில் நிலையத்திலும், துறைமுகத்திலும் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் புயல் தாக்கி உயிரிழந்தனர். புயல் காரணமாக ஒட்டுமொத்த தனுஷ்கோடியும் உருக்குலைந்தது. புயல் தாக்கி அரை நூற்றாண்டை கடந்துவிட்ட நிலையில் முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை இடையேயான புதிய தேசிய நெடுஞ்சாலையை பிதமர் நரேந்திர மோடி கடந்த 2017ம் ஆண்டு திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலையைத் தொடர்ந்து தபால் நிலையமும், புதிய கலங்கரை விளக்கமும் திறக்கப்பட்டுள்ளன. மேலும் தனுஷ்கோடிக்கு ரமேஸ்வரத்தில் இருந்து 17.20 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. தனுஷ்கோடியில் சேதமடைந்து பழமையாக உள்ள கட்டிடங்களின் பழமை மேலும் மாறாமல் பாதுகாக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், தொல்லியல் துறை இணைந்து பணியாற்றிட கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 கோடி மதிப்பில் திட்ட வரைவு மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், இந்த திட்டத்தை தற்போது வரை நடைமுறைப்படுத்தவில்லை. தனுஷ்கோடி புயலில் மிஞ்சியுள்ள பகுதிகளை பாதுகாக்க தொல்லியல் துறையும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனுஷ்கோடி மீனவ மக்களும், ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.