Asianet News TamilAsianet News Tamil

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் வீட்டை முற்றுகையிட்ட விசிகவினர்!

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் வீட்டை விசிகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

VCK Cadres seige Krishnagiri Congress candidate gopinath house condemns dmk mla and observor smp
Author
First Published Apr 18, 2024, 9:53 PM IST

விசிகாவை அவமதிப்பதாக கூறி, திமுக எம்எல்ஏ மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக பொறுப்பாளருக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வீட்டை விசிகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து அவமதிப்பு செய்து வருவதாக கூறி ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் இளங்கோ ஆகியோரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஓசூரில் உள்ள கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத்தின் வீட்டை முற்றுகையிட்டனர்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கோபிநாத் போட்டியிடுகிறார். இந்தியா கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத்திற்கு ஆதரவாக அவரை வெற்றி பெற செய்ய தொடர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வம் என்பவர், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக மேலிட பொறுப்பாளர் இளங்கோவனிடம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது இளங்கோ, செல்வத்திடம்  கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியே இல்லை என கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த செல்வம் இளங்கோவிடம் மறுப்பு தெரிவித்து பேசியுள்ளார். அப்போது அவர்களுக்குள் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என 50க்கும் மேற்பட்டோர் வேட்பாளரின் வீட்டை முற்றுகையிட்டனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார்!

இதுகுறித்து விசிக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் செல்வம் கூறுகையில், “ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் மற்றும் திமுக தேர்தல் பொறுப்பாளர் இளங்கோ ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து அவமதிப்பு செய்து வருகின்றனர். எனவே கட்சி மேலிடம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் விசிக பொறுப்பாளர்களிடம் பேசி  நாளை நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமா வேண்டாமா என்று முடிவை அறிவிப்போம்.” என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் வீட்டை விசிகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios