அயோத்தி தீர்ப்பு எதிரொலி..! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
பரபரப்பான அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகுவதை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் அமைத்திருக்கும் அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என்று நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. பரபரப்பான இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பை கூற இருக்கின்றனர்.
இதையடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ரயில் நிலையங்கள், விமான நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் பள்ளி, கல்லூரி மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று முதல் 11 தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் அயோத்தி தீர்ப்பு வெளியாகுவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்