தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் வெயிலின் வெப்பத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். வெயில் கடுமையாக இருந்த போதும் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. 

இதனிடையே வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று  நேற்று மாலை புயலாக மாறியது. வங்கக்கடலில் உருவாகி இருக்கும் இந்த புதிய புயலுக்கு ஆம்பன் என இந்திய வானிலை ஆய்வு மையம் பெயரிட்டுள்ளது.

மேற்குவங்காளம் மற்றும் ஒடிசா நோக்கி நகர இருக்கும் ஆம்பன் புயல் வரும் 20ம் தேதி மேற்கு வங்காளம் - வங்காளத்தேசத்தை ஒட்டிய கடற்பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் கரையை கடக்கும் முன், இன்று கிருஷ்ணகிரி பகுதியில், பலத்த காற்றுடன் சுமார் அரை மணி நேரம் கொட்டி தீர்த்துள்ளது மழை. இதனால் பல குடிசை வீடுகளும், ஷீட் போட்ட வீடுகளும் காற்றால் சூறையாடப்பட்டன. 

பல மரங்கள், அடுக்கடுக்காக முறிந்து விழுந்தது.  தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் கீழே விழுந்தது. அதே போல், பல தெருக்களில் மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்து கிடைப்பதால் மின் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மின் கம்பிகளை சரி செய்யும் பணியில்  மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அரை மணிநேரத்தில் விடாமல் பெய்த மழையால்... தற்போது வெட்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.