ஆசை மகனுடன் செல்லும் போது கொளுந்து விட்டு எரிந்த இ ஸ்கூட்டர் - அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?
ஸ்கூட்டர் முழுக்க தீ வேகமாக பரவியதை அடுத்து, அங்கிருந்தவர்கள், விரைந்து செயல்பட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரை அடுத்த பேகேப்பள்ளி அருகில் தனியார் குடியிருப்பு பகுதியில் சதீஸ்குமார் வசித்து வருகிறார். சதீஸ்குமார் தனியார் நிறுவனம் ஒன்றறில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். தினமும் பணிக்கு சென்று வர இவர் ஒகினவா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை பயன்படுத்தி வருகிறார்.
மேலும், பணிக்கு செல்லும் முன் தனது மகன் புகழ் (வயது 3) உடன் சிறிது தூரம் ஸ்கூட்டரில் ரைடு அழைத்து செல்வதை சதகீஸ்குமார் வழக்கமாக வைத்திருந்தார். அதேபோன்று சதீஸ்குமார் தனது மகனை அழைத்துக் கொண்டு ஒகினவா ஸ்கூட்டரில் ரைடு சென்றார். பாதி வழியில் சென்று கொண்டு இருக்கும் போதே ஸ்கூட்டரில் இருந்து புகை வெளியேறுவதை சதீஸ்குமார் கவனித்து இருக்கிறார்.
தீப்பிடித்து எரிந்த இ ஸ்கூட்டர்:
இதை அடுத்து உடனடியாக ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, மகனை தூக்கிக் கொண்டு பாதுகாப்பான தூரத்திற்கு வந்துவிட்டார். பின் ஸ்கூட்டர் சீட்டின் கீழ்புறத்தில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறுவதை சதீஸ்குமார் பார்த்தார். பின் சில நொடிகளில் ஸ்கூட்டரில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. மளமளவென தீ ஸ்கூட்டர் முழுக்க பரவியது. இதனால் ஸ்கூட்டர் கொளுந்து விட்டு எரிந்தது.
முன்கூட்டியே புகை வெளியேறுவதை கவனித்ததால், மகனை தூக்கிக் கொண்டு பாதுகாப்பான தூரத்திற்கு சதீஸ்குமார் வந்தார். இதன் காரணமாக தீ விபத்தில் சதீஸ்குமார் மற்றும் அவரது மூன்று வயது மகன் புகழ் எந்த விதமான காயங்களும இன்றி உயிர் தப்பினர். ஸ்கூட்டர் முழுக்க தீ வேகமாக பரவியதை அடுத்து, அங்கிருந்தவர்கள், விரைந்து செயல்பட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அங்கு நடைபெற இருந்த சஅம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது.
எலெர்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்த சம்பவம் பற்றி ஸ்கூட்டரை உற்பத்தி செய்த நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு விட்டது. இ ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பற்றி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரி-கால் நடவடிக்கை:
சமீப காலங்களில் இ ஸ்கூட்டர்கள் அதிக அளவில் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதை அடுத்து எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் ஸ்கூட்டரில் பிரச்சினை இருப்பின் அவற்றை விரைந்து சரி செய்யவும், தயக்கம் இன்றி ரி-கால் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இது மட்டும் இன்றி சில நிறுவனங்கள் தங்களின் இ ஸ்கூட்டர்களை ரி-கால் செய்தும், சில நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்கூட்டர்களை ஆய்வு செய்யும் திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றன.