தமிழகத்தில் கொரோனாவால் நெருங்க முடியாத கிருஷ்ணகிரி மாவட்டம்... பச்சை நிற மண்டலமாக நீடிப்பு...!
கொரோனா பாதித்த விழுப்புரம் மருத்துவரின் மனைவிக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
கொரோனா பாதித்த விழுப்புரம் மருத்துவரின் மனைவிக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றில்லாததை தொடர்ந்து பச்சை நிற பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் நீடிக்கிறது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ராயக்கோட்டையில் வசித்து வருகிறார். இவரது கணவர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். இவர், கடந்த வாரம் விடுமுறையில் கிருஷ்ணகிரிக்கு வந்து, வீட்டில் தங்கிவிட்டு, நேற்று முன்தினம் விழுப்புரம் திரும்பியுள்ளார். பிறகு நேற்று மீண்டும் பணிக்கு சென்றவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, கிருஷ்ணகிரியில் உள்ள அவரது மனைவி, தந்தை, அவரது வீட்டின் கீழ் பகுதியில் வசிக்கும் 11 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், 11 பேருக்கு சோதனை செய்யப்பட்ட அறிக்கை வெளிவந்துள்ளது. அதில், மருத்துவரின் மனைவி உள்ளிட்ட 11 பேருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத ஒரே மாவட்டம் கிருஷ்ணகிரி என்பதால் பச்சை நிற பகுதியாக நீடிப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.