கிருஷ்ணகிரியில் பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ராமகிருஷ்ணபதி என்ற ரயில்வே தண்டவாளத்தில் காலையில் 3 பேரின் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் உயிரிழந்த 3 பேரும் கணவன், மனைவி மற்றும் அவர்களது குழந்தையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

மேலும், குழந்தையின் கையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததற்கு அடையாளமாக பேண்டேஜ் ஒட்டப்பட்டு இருந்தது. இதனால், அக்குழந்தை மருத்துவமனையில் அண்மையில் சிகிச்சை எடுத்திருக்கலாம் என கருதி, அவர்களின் அடையாளத்தை தெரிந்து கொள்ளும் வகையில் மருத்துவமனைகளை தொடர்பு கொண்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பின்னர், 3 பேரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தனரா? அல்லது அந்த வழியாக செல்லும் ரயிலில் இருந்து தவறி விழுந்தார்களா? என ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.