தினகரனின் அமமுக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட 2 அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. கடந்த ஒரு மாதமாக அரசியல் தலைவர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைவதால் வேட்பாளர் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் உதவி தொடக்க கல்வி அதிகாரியாக இருப்பவர் நாகராஜ். காவேரிப்பட்டணம் ஆசிரியர் ஜெயப்பிரகாஷ். இவர்கள் இருவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இவர்கள் பிரச்சாரம் செய்வது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

இதனையடுத்து அவர்கள் நடத்திய விசாரணையில் அமமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது உறுதி செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி தொடக்க பள்ளி ஆசிரியர்கள் நாகராஜ், மற்றும் ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் ஆகியோரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.