கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இருக்கிறது அரசம்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருக்கு சொந்தமாக கோழிப்பண்ணை ஒன்று இருக்கிறது. அதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை அவர் வளர்த்து வந்துள்ளார். கோழிகளுக்கு தீவனம் அளிப்பதற்காகவும் அவற்றை பராமரிப்பதற்கும் வேலையாட்கள் சிலர் பணியில் இருக்கின்றனர். இந்த நிலையில் கோழிப் பண்ணையில் திடீரென தீப்பிடித்துள்ளது. மளமளவென பரவி தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. 

அதிர்ச்சியடைந்த ஸ்ரீதர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார்.ஆனால் தீயணைப்பு படை வீரர்கள் வருவதற்குள் தீயில் சிக்கி 4000க்கும் மேற்பட்ட கோழிகள் கருகி பரிதாபமாக உயிரிழந்தன. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. கோழிப்பண்ணையில் நிகழ்ந்த மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.