பட்டாசு கிடங்கில் அதிகாரிகள் ஆய்வின் போது வெடி விபத்து; 3 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பட்டாசு கிடங்கில் அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்ற போது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கிடங்கு மேலாளர், அதிகாரிகள் உள்பட 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜே. காருப்பள்ளி கிராமத்தில் சிவ பார்வதி ஃபயர் ஒர்க்ஸ் என்ற தனியாருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இதனை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வதற்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, உதவி நிலவரித் திட்ட அலுவலர் வட்டாட்சியர் முத்துப்பாண்டி ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது பட்டாசு கிடங்கின் கதவுகளை திறந்த பொழுது திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடன் சென்ற கிடங்கின் மேலாளர் சிமந்த் உட்பட மூன்று பேருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டு படுகாயமடைந்தனர். சுமார் 30 சதவிகிதம் அளவிலான தீக்காயங்களுடன் மூன்று பேரும் உடனடியாக ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினரும் வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கனரக வாகனங்களுக்கு புதை குழிகளாக மாறும் சாலைகள்; கோவையில் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு கிடங்கு பகுதியில் ஓசூர் சார் ஆட்சியர் திருமதி சரண்யா தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி முரளி உள்ளிட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரசு அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் சரயு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர்.