ஓசூர் பகுதியில் பிறந்து இரண்டு நாட்களே ஆன, பெண் குழந்தையை மர்ம நபர் ஒருவர் முட்புதரில் வீசி சென்றதில் எலிகள் கடித்து குதறி அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கங்கா நகர் என்ற பகுதியில் உள்ள முட்புதரில், மர்ம நபர் ஒருவர் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை வீசி சென்றுள்ளார்.  

திடீரென முட்புதரில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்கவே அந்த வழியே நடந்து சென்றவர்கள் ஓடி போய் பார்த்ததில், பச்சிளம் குழந்தை ஒன்று எறும்புகள் நடுவிலும், எலிகள் ஆங்காங்கு கடித்து குதறிய படியும் ரத்தவெள்ளத்தில் இருந்துள்ளது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு அருகே இருந்த அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்தும் எலி கடித்ததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையை வீசி சென்ற மர்ம நபர் யார் என வழக்கு பதிவு செய்து தேடிவருகிறார்கள்.