காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை, மகனை, துணிச்சலாக செயல்பட்டு, மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

ஈரோடு, பழையபாளையத்தைச் சேர்ந்தவர், விவசாயி திருமூர்த்தி (40). இவரின் மகன், கிருஷ்ணன் (9) 4-ம் வகுப்பு படித்து வருகிறார். ஆடி 18-ம் நாள் விழாவையொட்டி, பட்லூர் காவிரியாற்றில் புனித நீராட, நேற்று சென்றனர். மதியம், 1:00 மணிக்கு, இருவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். 

அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த, திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுமார், மோகன், கோவிந்தசாமி, துரைராஜ், சதீஷ்குமார் ஆகியோர், சாமர்த்தியமாக செயல்பட்டு உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டனர். 

பின்னர், இருவரின் இதயத்திற்கும் அழுத்தம் கொடுத்தும், வாயுடன் வாய் வைத்து, சுவாச திறனை மேம்பட செய்து, உயிர் பிழைக்க வைத்தனர். இதையடுத்து, தீயணைப்பு வாகனத்திலேயே, இருவரையும் அழைத்து சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தன் உயிரையும் பெரிதாக பொருட்படுத்தாமல் தந்தை, மகன் இருவரையும் காப்பாற்றிய, தீயணைப்பு துறை வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.