ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இருக்கிறது சுந்தரபுரம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி ககன்யா. இந்த தம்பதியினருக்கு மதியரசு(9) என்கிற மகன் இருக்கிறார். அவர் அங்கிருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பத்தன்று சிறுவன் பள்ளி வகுப்பறையில் சக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

அப்போது வகுப்பறையில் ஆறுச்சாமி என்கிற ஆசிரியர் இருந்திருக்கிறார். மதியரசு பேசிக்கொண்டிருந்ததால் அவரை கண்டித்த ஆசிரியர் பிரம்பால் சரமாரியாக அடித்திருக்கிறார். இதில் காலில் பலத்த காயத்துடன் சிறுவன் அழுது கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பெற்றோர்கள் மாணவனின் காலை பார்த்தபோது பிரம்பால் அடித்த தழும்புகள் பழுத்து காணப்பட்டது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

உறவினர்களுடன் பள்ளியை சென்று முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர், பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். இதுதொடர்பாக வட்டார கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார். சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியரிடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.