Asianet News TamilAsianet News Tamil

ஊருக்குள் வராத ஆம்புலன்ஸ்..! நிறைமாத கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச்சென்ற உறவினர்கள்..! 6 கிலோமீட்டர் நடந்தே சென்ற அவலம்..!

பர்கூர் அருகே பிரசவ வழியில் துடித்த கர்ப்பிணியை ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் 6 கிலோமீட்டர் தூரம் உறவினர்கள் தொட்டிலில் தூக்கி சென்றுள்ளனர்.

pregnant woman carried by relatives to hospital
Author
Bargur, First Published Dec 3, 2019, 12:39 PM IST

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் இருக்கிறது சுண்டப்பூர் கிராமம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மலைப்பகுதியில் இருக்கும் இக்கிராமத்திற்கு சென்று வர முறையான சாலைவசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

pregnant woman carried by relatives to hospital

இந்த ஊரைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி குமாரி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். குமாரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர். ஆனால் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வந்ததால் ஆம்புலன்ஸ் ஊருக்குள் வரவில்லை என்று தெரிகிறது. இதன்காரணமாக குமாரியை தூக்கிச்செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர்.

pregnant woman carried by relatives to hospital

அதற்காக ஒரு தொட்டிலை தயார்செய்து அதில் குமாரியை படுக்க வைத்தனர். பின் உறவினர்கள் இருவர் முன்னும் பின்னும் தூக்கி சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்றுள்ளனர். அதன்பிறகு ஒரு சரக்கு வாகனத்தில் பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குமாரியை கொண்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது செல்லும் வழியிலேயே அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

pregnant woman carried by relatives to hospital

முறையான சாலை வசதிகள் இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணை 6 கிலோமீட்டர் தூரம் தொட்டிலில் தூக்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் மலைகிராமத்திற்கு சாலை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios