காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு அருகே உள்ள தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாள பகுதியில் இளைஞர் மற்றும் இளம்பெண் ரயில் மோதி உடல் சிதறி உயிரிழந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்து கிடந்த இருவருரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி இச்சிப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் மகன் யுவராஜ் (29) என்பதும், இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அந்த இளம்பெண் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சதாசிவம் மகள் பூர்ணிமா(26)  என்பதும் மின்வாரிய அலுவலகத்தில், தொழில் நுட்ப பிரிவில் பணியாற்றி வந்தார். 

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் காதலர்கள், இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருவரும் மனஉளைச்சலில் இருந்துள்ளனர். இதன் காரணமாக காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம், கொடுமுடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.