திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில் காதல் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்நியூர் அருகே உள்ள ஒரிச்சேரி மல்லியூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ(23). இவருக்கும் திருச்செங்கோடு தேக்கவாடி பகுதியைச் சேர்ந்த ரம்யா (23). இருவரும்  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிஎம்இ படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். 

ஈரோட்டில் உள்ள தனியார் டிவி ஷோரூமில் இளங்கோ பணியாற்றி வந்தார். நேற்றிரவு பணி முடிந்து இளங்கோ வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டில் மனைவி ரம்யா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து மனமுடைந்த இளங்கோ அதே இடத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் உடலமாக தூக்கில் தொங்கினர்.

உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.