இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகத்தில் பரவிவருகிறது. நேற்று ஒரே நாளில் 759 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை சிறையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்த போதிலும் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 7,491 பேர் நலம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக விளங்கி வந்த ஈரோட்டில் தற்போது மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கவுந்தம்பாடியைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவர் அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவுதல் அதிகரிக்க தொடங்கிய நேரத்தில் ஈரோடு மாவட்டதில் தான் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது. 

பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் 70 பேர் சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை மருத்துவர்கள் தனிமை சிகிச்சையில் வைத்து தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் கொரோனாவின் பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு 69 பேர் நலமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நோயின் தீவிரத்தால் ஈரோட்டில் முதியவர் ஒருவர் பலியானார். அதன்பின் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியது. கடந்த ஏப்ரல் 15ம் தேதி புதியதாக 6 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதன்பின் பாதிப்புகள் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் 37 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் ஈரோட்டில் மீண்டும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதால் பச்சை மண்டலத்தில் இருந்த ஈரோடு தற்போது ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.