ஈரோடு அருகே மலைப்பகுதி சாலையில் கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தம்புரெட்டிமலை கிராமத்தை சேர்ந்த 15 பேர் வட்டகாடு என்ற இடத்திற்கு தோட்ட வேலைக்கு வாடகை டாட்டா சுமோ காரில் இன்று காலை 7 மணியளவில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, மலைசாலையில் உள்ள இறக்கத்தில் கார் இறங்கிய போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. 

பின்னர், சாலையோரமுள்ள மண் பகுதியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தேவராஜ், சிக்கணன், தொட்டப்பி, ஜோகன் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.