உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்... ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலையொட்டி ஆட்சியர் உத்தரவு!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து அங்கு உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அதனை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து அங்கு உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அதனை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிப்.27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: விவசாயத்தின் அடிப்படைகளை புரிந்துகொள்ள பசுமை பள்ளி திட்டம்; அமைச்சர் தொடங்கி வைத்தார்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதை அடுத்து ஈரோட்டில் உள்ள கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள், சிலைகள், பெயர், விளம்பர பலகைகள் போன்றவை அகற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்டவர்களிடம் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தென்காசியில் அதிக வட்டிக்கு பணம் தருவதாக கூறி மோசடி; நிதி நிறுவனரின் வீடு முற்றுகை
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல், எதிர்வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெற உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும் அவர்களிடம் உள்ள துப்பாக்கிகளை உடனடியாக சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களிலேயோ அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுத கிடங்குகளிலோ, துப்பாக்கி சட்டம் 1959-ன் பிரிவு 29B-ன்படி ஒப்படைத்து அதற்கான ரசீதுகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கப்பட்டதற்கான ரசீது நகல்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டியது அவசியம். தவறினால் துப்பாக்கி சட்டம் 1959-ன் பிரிவு 30 ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.