ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருக்கிறது பவானிசாகர் அணை. 105 அடி கொண்ட இந்த அணையின் கொள்ளளவு 33 கோடி கன அளவாகும். தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையான இதன்மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருக்கும் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இதனிடையே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதன்காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில் கடந்த 8 ம் தேதி தனது முழு கொள்ளளவை எட்டியது. சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு அணை நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கு முன்பாக  1960,1978 மற்றும் 1979ம் ஆண்டுகளில் பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியிருந்தது.

அணை நிரம்பியதை அடுத்து ஆற்றில் அதிகளவில் நீர் திறக்கப்பட்டது. திறக்கப்படும் நீரை விட அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 104 அடியாக குறைந்தது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்ததால் இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக தனது முழு கொள்ளளவை அணை எட்டியுள்ளது.

அணைக்கு தற்போது நீர்வரத்து 16 ஆயிரத்து 346 கனஅடியாக இருக்கிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 14 ஆயிரத்து 200 கன அடியாகவும், கீழ்பவானி ஆற்றில் 2 ஆயிரத்து 100 கன அடியாகவும் இருக்கிறது. இதன்காரணமாக பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர மக்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.