தமிழக விவசாயியின் வேதனை ட்விட்..! 12 டன் முட்டைகோசை மொத்தமாக வாங்கிய இளம் பாஜக எம்பி..!
உடனடி நடவடிக்கையில் இறங்கிய தேஜஸ்வி சூர்யா தனது உதவியாளர் மூலமாக கண்ணையனை தொடர்பு கொண்டு டிவிட்டரில் பதிவிட்ட வீடியோவை பார்த்ததாகவும், பயிரிடப்பட்டுள்ள முட்டைகோசில் 12 டன்னை விலைக்கு வாங்கி கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கண்ணையன் தோட்டத்தில் இருந்த முட்டைகோஸ் கிலோ ரூ.2.50க்கு விலை பேசி வாங்கி தனது தொகுதியில் இருக்கும் ஏழை மக்களுக்கு விநியோகம் செய்திருக்கிறார்.
தமிழக- கர்நாடக எல்லையில் சத்தியமங்கலம் அருகே இருக்கும் கெட்டவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன். விவசாயியான இவருக்கு சொந்தமாக நிலங்கள் இருக்கிறது. இவர் தனது நிலத்தில் 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் முட்டைக்கோஸ் பயிரிட்டு இருந்தார். சுமார் 1 லட்சம் அளவிலான முட்டை கோஸ் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக அதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்த கண்ணையன் ஊரடங்கால் கொள்முதல் செய்ய வியாபாரிகள் யாரும் வரவில்லை என்றும் நான்கு லட்சத்திற்கும் மேலாக தான் அதில் முதலீடு செய்திருப்பதாகவும் வேதனை தெரிவித்திருந்தார்.
மேலும் தன்னிடம் முட்டைகோஸ் வாங்கி தேவைப்படும் ஏழை மக்களுக்கு யாரேனும் உதவ முடியுமா எனவும் வேண்டுகொள் விடுத்திருந்தார். அப்பதிவு வைரல் ஆக பரவி பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்பி ஆன தேஜஸ்வி சூர்யாவின் கவனத்திற்கும் சென்றிருக்கிறது. இதையடுத்து உடனடி நடவடிக்கையில் இறங்கிய அவர் தனது உதவியாளர் மூலமாக கண்ணையனை தொடர்பு கொண்டு டிவிட்டரில் பதிவிட்ட வீடியோவை பார்த்ததாகவும், பயிரிடப்பட்டுள்ள முட்டைகோசில் 12 டன்னை விலைக்கு வாங்கி கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கண்ணையன் தோட்டத்தில் இருந்த முட்டைகோஸ் கிலோ ரூ.2.50க்கு விலை பேசி வாங்கி தனது தொகுதியில் இருக்கும் ஏழை மக்களுக்கு விநியோகம் செய்திருக்கிறார்.
அவரது செயலால் நெகிழ்ச்சி அடைந்த விவசாயி கண்ணையன் தேஜஸ்வி சூர்யாவிற்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியிருக்கும் அவர், பெரும்பாலான விவசாயிகள் பல்வேறு ரக காய்கறிகள் பயிரிட்டு அறுவடை செய்ய முடியாமல் தவித்து வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம்.பி. உதவிக்கரம் நீட்டியதுபோல், தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதிகளும் விவசாயிகள் பயிரிட்டுள்ள காய்கறிகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு நிவாரணமாக வழங்க முன்வந்தால் விவசாயிகள் நஷ்டம் ஏற்படாமல் தப்பிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழக விவசாயி ஒருவரின் வேண்டுகோளை ஏற்று 12 டன் அளவிலான முட்டைக்கோஸ்களை வாங்கி ஏழை மக்களுக்கு கொடுத்த இளம் பாஜக எம்.பியின் செயல் பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது.