சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு ஜெகன்(36), குமரேசன்(32) என இரண்டு மகன்கள். இருவரும் தந்தையுடன் சேர்ந்து ஜவுளி வியாபாரம் பார்த்து வருகின்றனர். இரண்டு பேருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இருக்கும் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். அங்கிருக்கும் வைகை ஆற்றில் குளித்து விட்டு கோவிலுக்கு செல்ல தயாராகினர். அப்போது இரு பெண்கள் ஆற்றில் மூழ்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெகன் மற்றும் குமரேசன் நீருக்குள் இறங்கி அவர்களை காப்பாற்ற முற்பட்டனர்.

ஆற்றுக்குள் தத்தளித்த பெண்கள் இருவரும் பாதுகாப்பாக கரை ஒதுங்கினர். ஆனால் எதிர்பாராத விதமாக சகோதரர்கள் இருவரும் நீர்சுழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். 

ஆற்றுக்குள் சிக்கியவர்களை காப்பாற்ற சென்ற சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.