காவல் சிறப்பு ஆய்வாளர் மீது தாக்குதல்: போலீசார் முன்னிலையில் நடந்த சம்பவம்!
திண்டுக்கல் அருகே நிலத்தை அபகரிக்கும் நோக்கில் போலீசார் முன்னிலையில் காவல் சிறப்பு ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திண்டுக்கல் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் குமாரவேல். இவர் திண்டுக்கல் காவல் ஆயுதப்படையில், சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாக்கியம் இவரும் சிறப்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
குமாரவேலுக்கு திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் பூர்வீக சொத்தாக ஒரு ஏக்கர் 4 சென்ட் நிலம் உள்ளது. இவரது நிலத்துக்கு அடுத்து வேங்காயி என்பவரின் 40 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை நீடித்து வந்துள்ளது. ஆனால், அவரவர்க்கு சேர வேண்டிய நில அளவைகளை சர்வேயர் கொண்டு அளந்து சரியாக பிரித்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பு வெளியாகி பல வருடங்களாகியும், நிலத்தை சர்வேயர் மூலம் அளந்து கல் ஊன்றினாலும் அதனை பிடுங்கி எறிந்து விடுவதாக தெரிகிறது.
50 கிலோ தக்காளியை எப்படி 700 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவது? இது திண்டுக்கல் சிக்கல்!!
குமாரவேலுவின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் வேங்காயுடன் சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் செம்பன், ரவி ஆகியோர் இடத்தை அளக்கவிடாமல் ஒவ்வொரு முறையும் பிரச்சனை செய்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து குமாரவேலுக்கு சாதகமாக முடிவு வந்ததையடுத்து, இது சம்பந்தமாக ஏற்கனவே நான்கு முறை சர்வேயர் வைத்து நிலத்தை அளந்து பிரச்சனையாகியுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து எஸ்.பி.யிடம் புகார் அளித்து வடமதுரை போலீசார் பாதுகாப்புடன் நிலத்தை சர்வேயர் வைத்து அளந்தபோது, சார்பு ஆய்வாளர் குமாரவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, வேங்காயி, செம்பன், ரவி மற்றும் 10க்கும் மேற்பட்டோர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த குமாரவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் பாதுகாப்பில் இருக்கும் பொழுது சிறப்பு சார்பு ஆய்வாளர் குமாரவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.