திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புதுமாப்பிள்ளை உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அம்மாபட்டியைச் சேர்ந்தவர் விஜய பிரபாகரன். இவர் தனது உறவினர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் மரியாயிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது சரக்கு லாரி மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட விஜய பிரபாகரனும் லியோ அமல ஜோசப்பும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். படுகாயமடைந்து லாரன்ஸ் என்பவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

உடனே விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லாரன்ஸ் என்பரை மீட்டு சிகிச்சைகாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், 2 பேரின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சாலை விபத்தில் உயிரிழந்த விஜயபிரபாகரனுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.