தனியார் பள்ளி ஆசிரியைக்கு அரசுப் பேருந்து ரூபத்தில் வந்த எமன்; திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த சோகம்
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதியதில் தனியார் பள்ளி ஆசிரியை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாநகராட்சி மையப்பகுதியில் உள்ளது காமராஜர் பேருந்து நிலையம். இப்பேருந்து நிலையத்திற்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான உள்ளூர், வெளியூர் பேருந்துகள் வந்து செல்கின்றன. அதேபோல் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திண்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி மீரா (வயது 35). தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் புறநகர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த மீரா பேருந்து நிலையத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வடமதுரையில் இருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்குள் அதிவேகமாக நுழைந்த டவுன் பஸ் மோதியதில் முன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த நகர் வடக்கு காவல் துறையினர் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பேருந்து நிலையத்தில் அரசு அரசு பேருந்து மோதி இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.