Dindigul Accident: சரக்கு அடிச்சிட்டு வண்டி ஓட்டுனியா? ஓட்டுநரின் பதிலை கேட்டு ஷாக்கான பணியாளர்கள்
வேடச்சந்தூர் அருகே மதுபோதையில் இயக்கப்பட்ட கார் எதிரே வந்த லாரி மீது மோதி தலைகீழாக கவிழ்ந்ததில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், இடையகோட்டை அருகே உள்ள குறிகாரன் வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று வேடசந்தூர் அருகே உள்ள விருதைப்பட்டி கிராமத்தில் உள்ள இவரது உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.
துக்க நிகழ்வை முடித்துவிட்டு மீண்டும் தனது கிராமத்திற்கு வேடசந்தூரில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில் காரில் தனியாக சென்றுள்ளார். கார் ஆத்து மேடு பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் தலை கீழாகக் கவிழ்ந்தது.
காரின் உட்பகுதியில் படுகாயங்களுடன் சிக்கிக் கொண்டிருந்த சுப்பிரமணியை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரின் உள்ளே பார்த்தபோது மது பாட்டில்கள், மிச்சர் பாக்கெட் இருந்தது தெரியவந்தது. வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது சுப்பிரமணியிடம் ஒருவர் மது அருந்தி காரை ஓட்டினீர்களா என்று கேட்டபோது ஆமாம் ஒரு கட்டிங் சாப்பிட்டு தான் காரை ஓட்டினேன் என்று சுப்பிரமணி கூறினார்.
பக்கவாதத்தால் முடங்கிய குடும்ப தலைவர்; வாடகை வீட்டு உரிமையாளரின் செயலால் குடியிருப்புவாசிகள் அச்சம்
மேலும் காயமடைந்த சுப்பிரமணியின் தலையில் 12 தையல்கள் போடப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மது அருந்தி காரை இயக்கி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.