பழனியில் பள்ளிவாசல் அருகில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரபட்டியில் ராஜாமுகமது என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவையில் கார் குண்டு வெடிப்பு நிகழ்வைத் தொடர்ந்து அவ்வபோது என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகத்திற்குறிய பகுதிகளில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அன்று சென்னை, கோவை உட்பட 40 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டி பள்ளிவாசல் அருகில் வசித்து வருபவர் ராஜா முகமது (35).
இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. ராஜா முகமது தேங்காய் குடோனில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிமுதல் ராஜாமுகமது வீட்டில் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இவர் எந்த ஒரு அமைப்பிலும் பொறுப்பாளராகவோ, உறுப்பினராகவோ இல்லாதவர் என்றும் கூறப்படுகிறது.
எந்த அமைப்பிலும் தொடர்பில் இல்லாத ராஜா முகமதுவின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் பழனியில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் மூன்று நாட்கள் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் தற்போது நெய்க்காரபட்டியில் என்ஐஏ அதிகாரிகள் முகாமிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.