திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரை சூழ்ந்து கொண்டு  அரசு பேருந்து நடத்துனர் 5 க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்திய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திண்டுக்கலில் இருந்து தேனி செல்வதற்காக அந்தப்பயணி அரசு பேருந்தில் பின்பக்க இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது ஓட்டுநரும், நடத்துனரும் அந்தப்பயணி அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் வந்து சீருடையை மாற்றி உள்ளனர். ஏன் நான் உட்கார்ந்த்து இருக்கும் இடத்திற்கு வந்து தான் சீருடை மாற்ற வேண்டுமா? என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து நடத்துனருக்கும் அந்தப்பயணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தப்பயணியை கீழே இறக்கி விட்டுள்ளனர். வாய்த்தகராறு முற்றிய நிலையில் அந்தப்பயணியை நடத்துனர் கன்னத்தில் அறைந்துள்ளார். 

இதனையடுத்து, நடத்துனர் மீதும் அந்தப்பயணி தாக்குதலில் ஈடுபடவே, ஏண்டா நடத்துனர்கள் என்றால் உங்களுக்கு அவ்வளவு கேவலமா? எனக் கேட்டு சுற்றி இருந்த மற்ற அரசுப்பேருந்து நடத்துனர்களும் ஒன்று சேர்ந்து அந்தப்பயணி மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது அந்தப்பயணியை ஆபாச வார்த்தைகளிலும் திட்டித் தீர்த்து கீழ தள்ளி புரட்டி எடுத்தனர். இதனை  அருகில் இருந்தவர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில் பயணி மீது தாக்குதல் நடத்திய அரசு பேருந்து நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.