காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் திண்டுக்கலில் 1 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்
காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 10,000 மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் பசுமை செந்துறை இயக்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றியத்தில் உள்ள செந்துறை பிர்கா பகுதியில் அடுத்த ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் அவர்கள் நிலங்களில் நட திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக, 10 ஆயிரம் டிம்பர் மரக்கன்றுகள் நேற்று (ஆகஸ்ட் 31) விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
இதன் தொடக்க விழா நத்தம் ஒன்றியத்தில் உள்ள பழனிப்பட்டி கிராமத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் நத்தம் ஒன்றியத்தின் தலைவர் திரு.ஆர்.வி.என் கண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார். குடகிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி திருமதி. ராஜேஸ்வரி அழகர்சாமி, துணைத் தலைவர் திரு.சூரியா சந்திரன், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் திரு.பாக்கியலட்சமி சிவஞானம், பசுமை செந்துறை இயக்கத்தின் தலைவர் திரு.துரை அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுச்சூழலுக்கு நன்மை பயப்பது மட்டுமின்றி விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தேக்கு, செம்மரம், மஞ்சள் கடம்பு, மகோகனி, ரோஸ்வுட் உள்ளிட்ட பண மதிப்புமிக்க மரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
மரக்கன்றுகள் வழங்குவதோடு மட்டுமின்றி அதை நடும் விவசாயிகளின் நிலங்களுக்கு காவேரி கூக்குரல் இயக்கத்தினர் நேரில் சென்று மண் மற்றும் தண்ணீரை ஆய்வு செய்து இலவச ஆலோசனை வழங்கி வருகின்றனர். குறிப்பாக, விவசாயிகளின் பொருளாதார தேவை மற்றும் எந்தெந்த மண்ணில் எந்தெந்த மரம் வளரும் என்பதை பரிந்துரை செய்து வருகின்றனர்.