திருவிழாவின் போது காவல்துறை அதிகாரி மீது பட்டாசை கொளுத்தி போட்டு தாக்குதல் - போலீஸ் வலைவீச்சு
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே மதுபோதையில் காவல் துறையினர் மீது பட்டாசை கொளுத்திப்போட்டு தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 2 பேர் தலைமறைவு.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் சாலையில் அமைந்துள்ளது வாய்க்கால்கரை. இங்குள்ள மதுரைவீரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சுவாமி ஊர்வலம் இரவு நடைபெற்றது. அப்போது அங்கு வேடசந்தூர் காவலர் பாலமுருகன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆத்துமேடு டாஸ்மாக் கடை முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த பாலமுருகன், அங்கிருந்தவர்களிடம் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 5 பேர் கொண்ட கும்பல், காவலர் என்று கூட பாராமல் பாலமுருகன் மீது பட்டாசை கொளுத்தி வீசியுள்ளனர். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் ஆத்திரம் அடங்காத அவர்கள் பாலமுருகனை அடித்து, உதைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, பாலமுருகனின் செல்போனை பிடுங்கி சாலையில் வீசி உடைத்துள்ளனர். மேலும் வாகனத்தை மேலே ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று பாலமுருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
சேலத்தில் மது அருந்திவிட்டு புல் போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியரால் பெற்றோர் அதிர்ச்சி
இதனைத் தொடர்ந்து வேடசந்தூர் காவல் துறையினர் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து குமரேசன், மாரிமுத்து, வெள்ளைச்சாமி ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான ராஜபாண்டி, வடிவேல் ஆகிய இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு 2 பேரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.