Construction Work: வீட்டிற்குள் பள்ளம் தோண்டியபோது திடீரென வெடித்துச் சிதறிய மர்ம பொருள்; 3 பேர் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே, வீடுகட்டும் பணியின் போது, மர்ம பொருள் வெடித்ததில், பெண் உட்பட 3 பேர் படுகாயம். அடைந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையம் கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 56). இவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். அய்யம்பாளையம் கவுண்டர் தெருவில் குடும்பத்துடன் தனது பூர்வீக வீட்டில் குடியிருந்து வருகிறார். இவர், குடியிருந்து வரும் வீட்டின் அருகாமையில் இவருக்கு சொந்தமான சிமெண்ட் சீட் போடப்பட்ட வீடு உள்ளது. இந்த வீடு மிகவும் சேதம் அடைந்து இருந்ததால், இந்த வீட்டினை பழுது பார்க்க முடிவெடுத்து மராமத்து வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த பணியினை எம்.வாடிப்பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் சுப்பிரமணி (45) மற்றும் கட்டிட உதவியாளர்கள் சூர்யா (25), ரேவதி (40) ஆகியோர் தரைத்தலத்தில் புதிதாக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, மண்வெட்டியால் சூர்யா தரை பகுதியை வெட்டிக்கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக திடீரென தரையின் அடிப்பகுதியில் இருந்த மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் கட்டிட தொழிலாளி சூர்யா மற்றும் அருகாமையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ரேவதி மற்றும் கொத்தனார் சுப்பிரமணி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பட்டிவீரன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து வெடி மருந்து நிபுணர் குழுவினர் விபத்து நடந்த வீட்டில் சோதனை நடத்தினர்.
வெடி விபத்து நடந்த இடத்தில் வெடி மருந்து பொருள் வெடித்ததற்கான தடயம் இல்லாததால், விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்த மாதிரிகளை சேகரித்து எடுத்துச்சென்றனர். மேலும், இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அய்யம்பாளையம் பகுதியில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.