இன்னுயிர் காக்கும் 48 திட்டங்கள் மூலம் ஒன்றரை லட்சம் மக்கள் பயன்! அமைச்சர் சக்கரபாணி தகவல்!
இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத திட்டமான இன்னுயிர் காக்கும் 48 திட்டங்கள் மூலம் ஒன்றரை லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தொப்பம்பட்டி ஊராட்சியில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி, கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில், கர்ப்பிணி பெண்கள் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொண்டனர். மருத்துவ முகாமில் கலந்து கொண்ட இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் செய்திருந்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர் சக்கரபாணி, இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத தேர்தல் அறிக்கையில் அறிவிக்காத திட்டமான இன்னுயிர் காக்கும் 48 திட்டத்தின் மூலம் ஒன்றரை லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகவும் சுமார் 70 கோடி மதிப்பீட்டில் பழனியில் அனைத்து வசதியுடன் கூடிய தலைமை மருத்துவமனை பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் பணிகள் முடிவுற்று அனைத்து சிகிச்சைகளும் பழனியில் பெற முடியும் என்பதால் மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் மதுரை மருத்துவமனைகளுக்கு செல்ல தேவை இல்லை என தெரிவித்தார்.
இதேபோல் ஒட்டன்சத்திரம் நகராட்சியிலும் 25 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டிட பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.