கடலூர் அருகே டிரான்ஸ்பார்மர் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 45-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருச்சியிலிருந்து கடலூர் நோக்கி அரசு பேருந்து காலை சென்றிக்கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 45-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அந்த பேருந்து இன்று பிற்பகல் 2 மணியளவில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் கிழக்கு வால்பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது.  

அப்போது சாலையை முதலியவர் ஒருவர் திடீரென கடக்க முயன்றார். இந்த முதியவர் மீது பேருந்து மோதாமல் இருக்க அரசு பேருந்தை ஓட்டுநர் திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில மாறுமாறாக ஓடியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறினர். பின்னர் சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்துக்குள்ளானது. பேருந்து மோதிய வேகத்தில் டிரான்பார்மரிலிருந்து தீப்பொறிகள் விழுந்தன.

இதில் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினர். பேருந்தில் மின்சாரம் பாய்ந்து இருந்தால் 45-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்திருப்பர். ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படாமல் உயிர் பிழைத்தனர். இதில் டிரான்ஸ்பார்மர் முற்றிலுமாக சேதமடைந்து மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.