என்னைக் கொல்ல சதி... காவல் துறை பாதுகாப்பு கோரும் திருமாவளவன்!
தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல் துறை பாதுகாப்பு கோரி விசிக தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் திடீரென வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
திருமாவளவன் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் களம் இறங்கியிருக்கிறார். வேட்பாளர் என்ற முறையில் எல்லா வேட்பாளர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு. சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது சிதம்பரத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ள திருமாவளவன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “என்னுடைய உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்துவருகிறது. கடந்த 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் என்னைக் கொல்ல முயற்சி நடந்தது. தொடர்ந்து தொலைபேசி வாயிலாகவும் கொலை மிரட்டல்கள் வருகின்றன. தேர்தல் நேரத்தில் காவல் துறையின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தேர்தல் காலத்தில் மட்டும் அல்லாமல் எல்லாக் காலங்களிலும் தனக்கு காவல் துறையின் பாதுகாப்பை வழங்க வேண்டும்” என்று திருமாவளவன் குறிப்பிட்டிருக்கிறார்.
திருமாவளவனின் இந்த மனு மீதான விசாரணை, ஏப்ரல் 1 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. திருமாவளவன் திடீரென இந்த மனுவை தக்கல் செய்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.