சிதம்பரத்தைச் சேர்ந்தவர் லதா. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்று தனது மகளின் பிறந்தநாள் என்பதால் சிதம்பரம் கோவிலில் இருக்கும் முக்குறுணி விநாயகர் சந்நிதியில் அர்ச்சனை செய்வதற்காக சென்றார். அங்கு தீட்சிதர் தர்ஷன் என்பவர் பூஜை செய்யும் பணியில் இருந்துள்ளார்.

அவரிடம் லதா அர்ச்சனை தட்டை வழங்கியுள்ளார். ஆனால் அந்த தீட்சிதர் மந்திரம் எதுவும் கூறாமல் அமர்ந்து கொண்டே தீபாராதனை காட்டியிருக்கிறார். இதுகுறித்து லதா அவரிடம் 'ஏன் மந்திரம் எதுவும் சொல்ல வில்லை?' என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த தீட்சிதர் லதாவை ஆபாசமாக பேச, வாக்குவாதம் முற்றி பெண் என்றும் பாராமல் அவரை தீட்சிதர் அடித்ததாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பிய போது, லதா தனது செயினை பறிக்க வந்ததால் தான் தாக்கியதாக தீட்சிதர் கூறியுள்ளார். ஆனால் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அவ்வாறு நடக்கவில்லை என்றும், தீட்சிதர் தான் முறையாக பூஜைகள் செய்யாமல் அப்பெண்ணை தாக்கியதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சார்பாக சிதம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.