கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருக்கு நடராஜர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆடவல்லான் கோலத்தில் காட்சி தரும் சிவபெருமானை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்த கோவிலில் ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித்திருமஞ்சனமும் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சிவ பக்தர்களால் கருதப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான ஆருத்திரா தரிசன திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 1ம் தேதி கோவிலில் கொடியேற்றம் நிகழ்வு நடந்தது. ஒவ்வொரு நாளும் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேங்கள் மற்றும் அலங்காரங்கள் நடந்து சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. 9ம் தேதி அன்று தேரோட்டமும் தொடர்ந்து 10ம் தேதி சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது. அன்று காலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் ராஜ அலங்காரத்தில் நடராஜர் காட்சி அளிக்கிறார். 

12 மணி அளவில் சித்திரசபையில் ரகசிய பூஜை நடைபெறுகிறது. பின் 2 மணிக்கு சிறப்பு வாய்ந்த ஆருத்ரா மகா தரிசனம் நடைபெறுகிறது. அதைக்காண பல்லாயிர கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை செயல்படாது என்றும், அதற்கு பதிலாக பிப்ரவரி 1ம் தேதி வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.