புரெவி புயல் காரணமாக சிதம்பரத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 32 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதனால், நடராஜர் கோயில் உட்பட பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

வங்க கடலில் நிலைகொண்டிருந்த புரெவி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது. இதன் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் உள்பட பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை, கடலூர் மாவட்டங்கள் நிவர் புயலை முன்னிட்டு பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் முழுமையாக வடிவதற்குள், புரெவி புயல் காரணமாகவும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், புரெவி புயலால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அதீத கனமழை பெய்து வருகிறது. இதனால், நடராஜர் கோவிலில் மூலவரான நடராஜரை சுற்றி உள்ள பிரகாரத்திலும் கோவிலை சுற்றி உள்ள  சுற்றுப்பிரகாரத்தில் மழை நீர் புகுந்து சுமார் 4 அடி அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. நடராஜர் கோயிலுக்குள் பெய்யும் மழை நீர் கோயில் வளாகத்தில் உள்ள சிவகங்கை குளத்துக்கு சென்றுவிடும். 

பின்னர் அந்த  குளம் நிரம்பியவுடன் அதன் அடியில் செல்லும் கால்வாய் வழியாக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தில்லையம்மன் கோயில் குளத்திற்கு தண்ணீர் சென்றுவிடும். ஆனால்  கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தூர்வாரப்படாமல் உள்ளதால்  மழை நீர் வெளியேறாமல் கோயிலுக்குள் புகுந்துவிட்டது. இது குறித்து சிதம்பரம் நடராஜர் கோவில் பாஸ்கர தீட்சிதர் கூறும்போது, கடந்த 45 ஆண்டுகளில் இந்த அளவுக்கு கோயிலுக்குள் மழை நீர் வந்தது இல்லை என்றார்.