கடலூர் அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளின் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுகா வெங்கடாம்பேட்டைஅடுத்த வேகாக்கொல்லை பிள்ளைபாளையம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன் (34), பொக்லைன் ஆபரேட்டர். இவரது மனைவி சுதா (30). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு திலோக்நாத் (4), ஐஸ்வர்யா(3) என 2 குழந்தைகள் இருந்தன. கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று மதியம் ஐயப்பன் சுதாவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் இருந்து ஐயப்பன் வெளியே சென்று விட்டார். இதனால் சுதா மனவேதனையில் இருந்துள்ளார். இதையடுத்து, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர் தனது இரு குழந்தைகளையும் ஜாக்கெட் மூலம் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார். பின்னர் சுதா புடவை மூலம் தனது கூரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அருகே வசித்து வரும் சுதாவின் மாமனார் சண்முகம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது குழந்தைகள் மற்றும் மருமகள் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.