புதுச்சேரியில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் டிரைவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி முதலியார்பேட்டை உழந்தை கீரப்பாளையம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (32). டாக்சி டிரைவரான இவர் சொந்தமாக கார் வாங்கி ஓட்டி வந்தார். இவர் தினமும் சவாரிக்கு சென்ற பிறகு காரை வீட்டின் அருகில் நிறுத்துவது வழக்கம். இன்று காலை வழக்கம் போல் முத்துக்குமார் சவாரிக்கு செல்ல காரை ஸ்டார்ட் செய்தார். அப்போது காரில் இருந்த ஏ.சி. திடீரென வெடித்தில் கார் திடீரென தீப்பிடித்தது. 

சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவியது. இதில், முத்துக்குமார் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்டார். இதனை கொண்ட பொதுமக்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். பின்னர், கார் கண்ணாடியை உடைத்து முத்துக்குமாரின் உடலை கருகிய நிலையில் மீட்டனர். 

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஏ.சி. எந்திரத்தில் கியாஸ் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த முத்துக்குமரனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்ததும் தெரியவந்துள்ளது.