நெய்வேலி பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், கஞ்சா விற்பனை செய்யும் ஒரு இளைஞர் வாட்ஸ்அப்பில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு காவல்துறைக்கு சவால் விடுத்துள்ளார். 

கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை காவல்துறையினர் பல்வேறு முயற்சிகள் எடுத்து தடுத்து வரும் நிலையில், கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர் வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கஞ்சா விற்பனை செய்யும் இளைஞன் நான், பெங்களூர் மணி என்ற மணிகண்டன்  பேசுகிறேன், நான் தற்போது நெய்வேலி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருகிறேன், இதனை தடுக்க நினைக்கும் சுரேஷ் என்பவரை கொலை செய்ய போகிறேன். போலீசார் என்னை கைது செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பியதுடன், கஞ்சா விற்றவர் மற்றும் கஞ்சா அடிப்பவர் என அனைவரும் சேர்ந்து வீடியோ எடுத்துள்ளனர். 

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. ஆனால் இந்த வீடியோவில் பேசுபவர் பெங்களூரை சேர்ந்த கண்ணன் மகன் மணிகண்டன் என்றும், இவர் நெய்வேலி மந்தாரகுப்பத்தில் உள்ள ஓம்சக்தி நகரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. பெங்களூரிலிருந்து நெய்வேலி வரும்போது, கஞ்சா பொட்டலங்களை எடுத்துவந்து நண்பர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.