சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 228ஆக உயர்ந்துள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாடு சென்று திரும்பிய 18 பேருக்கு முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்களது குடும்பத்தினருக்கும் பரவியது. பின்னர், அவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வெற்றிகரமாக வீடு திரும்பினர். இதனையடுத்து, கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 

இந்நிலையில், வேலையில்லாத காரணத்தால் சென்னை கோயம்பேடு சந்தையில் பணியாற்றி 600 பேர் கடலூர் மாவட்டத்திற்கு ஊர் திரும்பினர். கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில்,  மே 2 ஆம் தேதி 7 பேருக்கும், 3 ஆம் தேதி 8 பேருக்கும் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல், இன்றும் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, கடலூர் மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 228ஆக உயர்ந்துள்ளது. அதில், கோயம்பேடு சந்தை மூலம் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள நபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த முடிவுகள் வந்தால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை முதலிடத்திலும் 2வது இடத்தில் கடலூரும் இருந்து வருகிறது. 

இது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் கூறுகையில் கொரோனா தொற்று நமக்கும் பரவிவிடும் என மக்கள் அச்சப்பட வேண்டாம். முன்கூட்டியே நடவடிக்கை எடுத்துள்ளதால் எங்களுக்கு இது கூடுதல் சுமையாக தெரியவில்லை. மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவுறுத்தியுள்ளார்.